கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கவரப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும், மீனாவுக்கும் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனா தனது 16 வயது மகளை சுந்தரமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சமூக நலத்துறை அலுவலர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மீனா, சுந்தரமூர்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமியை மீட்டு மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.