இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்தி எதிர்ப்பு உணர்வு என்பது தமிழ் மண்ணில் மங்கி விடவில்லை, குன்றி விடவில்லை. எந்த வடிவத்திலே வந்தாலும் அதை எதிர்ப்பதற்கு, சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டு தான், இன்றைக்கு தமிழகம் எங்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன்.
இங்கே கூடி இருக்கின்றவர்கள் இந்தி எதிர்ப்பு உணர்வு என்கின்ற அந்த உணர்வோடு இங்கே நாம் கூடியிருக்கின்றோம். இந்த உணர்வை எந்த மதவாத சக்தியாலும் மாற்றி விட முடியாது. அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்… நாம் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்லி, அரசியல் செய்துவிட முடியும் என்று.. இன்றைக்கு தலைவன் தளபதியினுடைய ஆட்சியிலே நடந்து கொண்டிருக்கக் கூடிய குடமுழுக்கு விழாக்களைப் போல, எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை, எந்த ஆட்சியிலும் அரசு பணம் தரவில்லை.
கோடி கோடியாக ஒவ்வொரு ஆலயத்திற்கு தருகின்ற நிலையை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவில்களுக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை தரப்பட்டது என்று சொன்னால், இந்த அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதா ? கிடையாது. ஏதாவது ஒரு வடிவத்தில் நம்மைப் பற்றி தவறாக மக்கள் மத்தியில் கருத்துக்களை திணித்து விட முடியுமா ? விதைத்து விட முடியுமா ? என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள், நீங்கள் எதையும் இந்த தமிழ் மண்ணிலே செய்து விட முடியாது அதற்கு தமிழன் எவனும் இடம் கொடுக்க மாட்டான் என தெரிவித்தார்.