பாகிஸ்தான் நாட்டில் கராய்ச்சி நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் விசாரணை அதிகாரியாக ஆமீர் கோபங் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவருடைய வங்கி கணக்கில் சம்பள பணத்துடன் சேர்த்து ரூபாய் பத்து கோடி விழுந்துள்ளது. ஆனால் இது பற்றிய அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதனை அடுத்து வங்கியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஆமீர் எடுத்து பேசியுள்ளார். அதில் “உங்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 10 கோடி விழுந்துள்ளது” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியை அடைந்த ஆமீர் கூறியதாவது “இவ்வளவு பணம் எனக்கு கிடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஏனென்றால் என்னுடைய வங்கி கணக்கில் இவ்வளவு பணத்தை நான் பார்த்ததே கிடையாது” என்று கூறியுள்ளார். ஆனால் ஆமீருக்கு இந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்க வில்லை. ஏனென்றால் வங்கியில் இருந்து வந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்பு வங்கி அதிகாரிகள் ஆமீர் செயல்படுவதற்கு முன்பாக அவருடைய கணக்கை முடக்கி ஏ.டி.எம்மில் கூட பணம் எடுக்க முடியாத அளவில் செய்து விட்டது. அத்துடன் ஒரு காவல் அதிகாரியின் வங்கி கணக்கில் எப்படி இவ்வளவு பணம் வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் லக்கானா மற்றும் சுக்கூர் மாவட்டங்களில் உள்ள காவல் அதிகாரிகளுக்கும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.