இங்கிலாந்து பேட்டர் டேவிட் மலான் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நாளை நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 2ஆவது அரையிறுதியில் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து பேட்டர் டேவிட் மலான் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இங்கிலாந்து பேட்டர் டேவிட் மலான், இலங்கைக்கு எதிரான இறுதி சூப்பர் 12 ஆட்டத்தின் போது இடுப்பு காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். எனவே தொடக்க வீரர் மலான் ஆடுவது சந்தேகத்திற்குரியது. சனிக்கிழமையன்று இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் மாலன் இடுப்புப் பகுதியில் காயமடைந்ததால் பேட்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை..
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி மோதலில் இடம்பெற வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டரும், துணை கேப்டனுமான மொயீன் அலி தெரிவித்துள்ளார். காயம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், அவர் இந்தியாவுக்கு எதிராக இடம்பெற வாய்ப்பில்லை என்று மொயீன் கருதினார்.
ஒரு பெரிய வீரர் மற்றும் இங்கிலாந்துக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மலான் விலகுவது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மலன் களமிறங்காவிட்டால், அணியில் உள்ள மாற்று பேட்டரான பில் சால்ட் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பேட்டிங் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் 3-வது இடத்தில் ஆடுவார் என தெரிகிறது. இலங்கைக்கு எதிராக ஸ்டோக்ஸ் அதே இடத்தில களமிறங்கி சிறப்பாக முடித்தார்..