இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது..
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது.
இதில் குரூப் 1 பிரிவிலிருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி நேற்று மெல்போர்ன் ஸ்டேடியத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் (61) கே.எல். ராகுல் (51) மற்றும் விராட் கோலி (26) ரன்கள் சேர்த்தனர், பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவரில் 115 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், வழக்கம்போல மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் தனது கச்சிதமான இறுதி கட்ட அதிரடியை தொடர்ந்தார். போட்டியில் நகர்வா வீசிய கடைசி 20ஆவது ஓவரில் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி அடித்திருப்பார் சூர்யா குமார் யாதவ். அதில் குறிப்பாக கடைசி ஒயிடாக வீசிய பந்தை நகர்ந்து முட்டி போட்டு ஏபிடி வில்லியர்ஸ் ஸ்டைலில் லெக் திசையில் அடித்தார். இந்த சிக்ஸர் வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61* ரன்கள் எடுத்தார். அவர் 244.00 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். இதன்மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு 28 இன்னிங்ஸ்களில் சூர்யகுமார் 44.60 சராசரியில் 1,026 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்கள் அவரது பேட்டிலிருந்து வெளிவந்துள்ளன, சிறந்த ஸ்கோர் 117. இந்த ரன்கள் 186.24 ஸ்ட்ரைக் ரேட்டில் வந்தன. மேலும் டி20 வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் சூர்யகுமார் ஆவார்.
முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இருக்கிறார். 2021 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் 73.66 சராசரியில் 1,326 ரன்கள் எடுத்தார். ரிஸ்வான் அந்த ஆண்டு ஒரு சதம் மற்றும் 12 அரை சதங்களை அடித்தார், சிறந்த ஸ்கோர் 104* ஆகும்.
Superb Surya!
Iconic moments like this from every game will be available as officially licensed ICC digital collectibles with @0xfancraze.
Visit https://t.co/8TpUHbQikC today to see if this could be a Crictos of the Game. pic.twitter.com/EMo1LVMxKv
— ICC (@ICC) November 6, 2022