Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டும் அசத்திய சாம்பியன் சூர்யா..! வேற லெவல்…. இந்திய அணியை புகழ்ந்து ட்விட் போட்ட ரெய்னா.!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் விளையாடியது. இந்த சூப்பர் 12 போட்டிகள் இன்றோடு முடிவடைந்துள்ளது. இதில் குரூப் 1 பிரிவிலிருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

இதில் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி மெல்போர்ன் ஸ்டேடியத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 61 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். மேலும் கே.எல் ராகுல் 35 பந்துகளில் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்) 51 ரன்களும், விராட் கோலி 26 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நவம்பர் 10ஆம் தேதி அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது..

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா பரபரப்பான வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!! தேசத்தை மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். ஒவ்வொரு வீரரும் வெளிப்படுத்தும் போராட்ட குணத்திற்கும் துணிச்சலுக்கும் தலைவணங்குகிறேன். நன்றாக விளையாடினீர்கள் பாய்ஸ்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல ரெய்னா மற்றொரு ட்விட்டில், நம்ப முடியாத அளவிற்கு ஸ்கை சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஒருமுறை சிறப்பாக ஆடியிருக்கிறீர்கள். நீங்கள் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது, மற்றொரு அழகான இன்னிங்ஸ் சாம்பியனுக்கு வாழ்த்துக்கள்! என்று பதிவிட்டுள்ளார். மேலும் முன்னாள் இந்திய வீரர்களாக விவிஎஸ் லக்ஷ்மன், அமித் மிஸ்ரா உட்பட பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |