அமெரிக்க நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.
அமெரிக்க நாட்டின் வருகிற 8-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் 5 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் 4 பேர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
எனவே தங்களின் பதவியை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் தேர்தலில் களமிறங்குகின்றனர். அவர்கள் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் ஆவார். மேலும் இவர்கள் 4 பேரும் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். 57 வயதான அமி பெரா பிரதிநிதிகள் சபைக்கு 6-வது முறையாகவும், ரோ கண்ணா (46), ராஜா கிருஷ்ணமூர்த்தி (49) மற்றும் பிரமிளா ஜெயபால் (57) 4-வது முறையாகவும் போட்டியிடுகின்றனர்.
இதனை அடுத்து இவர்களில் பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பதும், பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவர்கள் 4 பேரையும் தவிர்த்து மிச்சிகன் மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீ தானேதர் முதல் முறையாக பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிடுகின்றார். இவர்கள் இவரும் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராகவே களம் இறங்கியுள்ளார். மேலும் இவர் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் 5-வது இந்தியராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.