ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொலவக்காளிபாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை நடத்திய போது 18 வயதிற்கு உட்பட்ட 11 சிறுவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து எந்தவித பதிவேடுகள் இல்லாமலும், அரசு அனுமதி இல்லாமலும், போதுமான பணியாளர்கள் இல்லாமலும் சிறுவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தனியார் குழந்தைகள் காப்பக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாரிகள் 11 சிறுவர்களையும் மீட்டு ஈரோடு அரசு ஆண்கள் குழந்தைகள் காப்பகத்தில் தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர்.