இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும். அதே சமயம் தோல்வியடைந்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதி.
எனவே ஆஸ்திரேலியா ரசிகர்கள் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிசாங்கா 45 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 67 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுதியை விட்டு வெளியேறுகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது இங்கிலாந்து அணியும் தகுதி பெற்றுள்ளது, இரு அணிகளும் 7 புள்ளியில் இருந்தாலும் ரன் ரேட்டில் இங்கிலாந்து அதிகம் உள்ளதால் ஆஸ்திரேலியா வெளியேறுகிறது.