துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி முன்னதாகவே தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளார். இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள சவுக்கத் கானும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் நலமாக இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பைசல் சுல்தான் என்பவர் பத்திரிக்கையாளரிடம் கூறியுள்ளார். இருப்பினும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் இம்ரான்கான் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்த படி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது என்னை கொள்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றார்கள் என்பது தாக்குதல் முந்தைய நாள் தான் எனக்கு தெரியும் வெளியே செல்ல வேண்டாம் என என்னிடம் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அன்று நான் கண்டெய்னரில் இருந்த போது திடீரென 4 துப்பாக்கி குண்டுகள் என் காலை துளைத்தது அங்கு இரண்டு பேர் இருந்தனர் அவர்கள் இரண்டு பேரும் ஒரே சமயத்தில் என்னை தாக்கி இருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். இந்த தாக்குதலுக்கு பின்னால் பிரதமர் ஷபாஷ் ஷெரீப், உள்துறை மந்திரி ராணா சனுல்லா மற்றும் உளவுத்துறையின் தலைவர் பைசல் போன்றோரே இதற்கு இருக்கின்றனர். மேலும் இந்த தேசத்தை காப்பாற்றுவதற்கு ராணுவ தளபதி மற்றும் தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.