சென்னை மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது “பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் சிலர் சுற்றித்திரிகின்றார்கள். அவர்கள் கண்டிப்பாக வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வார்கள். என்று கூறிவிட்டு தன்னுடைய இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்த உடனடியாக பெரம்பூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் பேரில் சென்னை ரயில்வே காவல்துறையினரும் செம்பியம் காவல்துறையினரும் இணைந்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் பெரம்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்த பயணிகளையும் அவர்களுடைய உடைமைகளையும் சோதனை செய்துள்ளனர். ஆனால் மர்ம நபர் கூறியது போல் வெடிகுண்டுகளுடன் யாரும் சிக்கவில்லை. அதன்பின் தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் பிரவீன்குமார் என்ற இளைஞர் தான் இவ்வாறு புரளியை கிளப்பியுள்ளார் என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். உடனடியாக செம்பியம் காவல்துறையினர் அந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில் அந்த வாலிபர் போதைக்கு அடிமையானவர் என்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் நடந்த அன்று பிரவீனின் தந்தை அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் பிரவீனை எச்சரித்து அறிவுரை கூறிய பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.