மகன் தகராறு செய்தால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மோதிரபுரம் இளங்கோ வீதியில் எலக்ட்ரீசியனான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 18 வயதுடைய சஞ்சய்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதற்கு புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு சஞ்சய் குமார் தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்காததால் நேற்று முன்தினம் சஞ்சய் குமார் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிமேகலை அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமேகலையின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.