அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக் முறையில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பாடும் அண்ணாமலை அரசியல் கோமாளி என செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அர்ஜூன் சம்பத், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசிய செந்தில் பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவிக்க முடியுமா?கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்ப்பதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது என்பது மக்கள் ஏற்காத ஒரு நடைமுறை. நீதிமன்றத்தில் தனக்கும் பந்திற்கும் சம்பந்தமில்லை எனக் கூறுகிறார் பாஜக தலைவர். முதலில் பாஜகவினர் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். அதற்கு முன்பு அரசியல் கோமாளிகள் தொடர்பான கேள்விகளை தன்னிடம் கேட்காதீங்க என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.