மும்பையில் புது சிறைச்சாலை மற்றும் 7 போலீஸ் நிலையங்களை அமைக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டு இருப்பதாக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தன் சுட்டுரை பதிவில், மாநிலத்தலைநகர் மும்பை, நாக்பூர் மற்றும் புனே போன்ற இடங்களில் புது சிறைச்சாலைகளின் தேவை தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. இப்போது மும்பையில் ஆர்தர் ரோட்டில் ஒரேஒரு ஜெயில் மட்டும்தான் இருக்கிறது. அத்துடன் காவலர் குடியிருப்புகளுக்கு அரசிடமிருந்து நிதிப்பற்றாக்குறை ஏற்படாது என உறுதியளித்தார்.
மும்பையின் வொர்லி பகுதியிலுள்ள காவலர் குடியிருப்புகளை மறு சீரமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 15 புது போலீஸ் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. 6 மாதங்களில் மேலும் 10 போலீஸ் நிலையங்கள் தயாராகி விடும். மகாராஷ்டிரா முழுதும் 457 காவலர் குடியிருப்பு, 53,860 காவலர்களுக்கான வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரத்தில் 87 புது போலீஸ் நிலையங்களும், மும்பையில் 7 காவல் நிலையங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி, அவசரமாகத் தேவைப்படும் திட்டங்களை முதலில் எடுத்து விரைந்து முடித்து, பிறகு கட்டம் வாரியாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். சாத்தியமான இடங்களில் போலீஸ் நிலையத்திற்கு அருகிலேயே காவலர் குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.