Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : முதல் வெற்றி..! ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து..!!

ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி..

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான மாதேவெரே (1),  கிரேக் எர்வின் (3), ரெஜிஸ் சகப்வா (5) என அனைவரும் சொற்பரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

 

இருப்பினும் சீன் வில்லியம்ஸ் 28(23) ரன்களும், சிக்கந்தர் ராசா அதிரடியாக 24 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 40 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். மற்றபடி வீரர்கள் அனைவரும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் எடுக்காமல் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறியதால் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நெதர்லாந்து அணியில் பால் வான் மீகெரென் 3 விக்கெட்டுகளும், பிராண்டன் குளோவர், லோகன் வான் வீக் மற்றும் பாஸ் டி லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியில் மேக்ஸ் ஓ’டவுட் 47 பந்துகளில் 52 ரன்களும், டாம் கூப்பர் 29 பந்துகளில் 32 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக ரிச்சர்ட் ங்காராவா மற்றும் முசராபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியதன் மூலம் நெதர்லாந்து அணி 4 போட்டிகளில் முதல் வெற்றியை  பதிவு செய்துள்ளது. அதே சமயம் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்திலிருந்த ஜிம்பாவே அணி தோல்வி அடைந்துள்ளதால் நான்கு போட்டிகளில் 3 புள்ளிகளுடன் வெளியேறியுள்ளது. ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து இரு அணிகளுமே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |