எதிர்க்கட்சியின் அமளியின் காரணமாக மக்களவை கூட்டத்தொடர் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று மக்களவை , மாநிலங்களவையின் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் டெல்லி வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்படுள்ளது. பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள காந்தி சிலை அருகே ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும், மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.
இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும் , வாயைப் பொத்திக் கொண்டும் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதே போல பிரதமர் நரேந்திர மோடியும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
எனவே மக்களவை மதியம் கூடும் போது கூட இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதேபோலவே மாநிலங்களவையிலும் அமளி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் 2 மணி நேரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.