குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 130ஐ தாண்டி இருக்கிறது. இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை போன்றவை குஜராத்தில் NDRF உடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 100 நபர்கள் இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் 177-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர். நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் சத்பூஜையைக் கொண்டாட 400 -500 நபர்கள் மோர்பி பாலத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் அதிகளவு மக்கள் மற்றும் அதிகசுமை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக யூகிக்கப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த பாலம் சீரமைப்புபணிகளுக்காக மூடப்பட்டு அண்மையில்தான் திறக்கப்பட்டது. இதனிடையில் இதற்கு முறையான சோதனைகள் செய்யப்படவில்லை எனவும் பொதுமக்களுக்காக பாலத்தை மீண்டும் திறப்பதற்கு முன் அரசு அங்கீகாரம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் ஊடகஅறிக்கைகள் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி பாலத்தை வேண்டுமென்றே அசைத்து ஆடிக் கொண்டிருந்த பல இளைஞர்களை பார்த்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் கூறியதாவது, பாலத்தின் பாதிவரை வந்தபோது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே பாலத்தை பலமாக ஆட்டினர். அச்செயல் எங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என தோன்றியதால், நாங்கள் பாலத்தை கடக்காமல் மீண்டும் திரும்பி விட்டோம் என தெரிவித்தனர். சில மணி நேரங்களுக்குப் பின் அது இடிந்து விழுந்ததாக விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.