ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்வதால் அந்நாட்டின் தலைநகரில் இருக்கும் 80% பகுதிகள் இருளில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களில் செர்காசி, கெர்சன் மற்றும் கீவ் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இருளில் மூழ்கியிருக்கிறார்கள். தங்கள் நாட்டின் கருங்கடல் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன், தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக மின் நிலையங்கள் கடும் சேதம் அடைந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து, உக்ரைன் தலைநகரான கீவில் உள்ள 80% பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
அங்கு குடிநீர் குழாய்களும் உடைந்திருப்பதால் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. நீரை சேமிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் அரசு ஜெனரேட்டர்கள் உட்பட 1000 மின்சாதனங்களை சுமார் 12 நாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
ரஷ்யாவிற்கு உக்ரைன் நாட்டின் ட்ரான்ஸ்பார்மர்கள், குடிநீர் குழாய்கள், அனல்மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்வதால் குடிநீர் பற்றாக்குறை, மின்வெட்டு மற்றும் இணையதள சேவைகள் தடைபட்டு இருக்கின்றன.