நாகை மாவட்டம் வேதாரணியம் தாலுகாவிற்கு உட்பட்ட நெய் விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்த வீரசாமி ராணி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்களுடைய மகன் ஸ்ரீபரன்(21), மகள் சுபஸ்ரீ (18) கூலி வேலை பார்த்து வந்த வீராசாமி சுமை தூக்கும் போது முதுகு தண்டுவடம் பாதித்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த 2016 ஆம் வருடம் முதல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன்பின் ராணி தையல் வேலை செய்தும் ஆடுகள் வளர்த்தும் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். எவ்வளவு துன்பங்களை சந்தித்தாலும் மகன் மகளை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெற்றோரின் கனவை நினைவாக்கும் விதமாக ஏழ்மையான சூழ்நிலையிலும் ஸ்ரீபரனும் அவருடைய தங்கையும் நன்றாக படித்துள்ளனர். அதன்பின் இருவரும் தஞ்சாவூரில் உள்ள ஒரு மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து நீட் தேர்வில் ஸ்ரீதரன் 438 மதிப்பெண்களும், சுபஸ்ரீ 319 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் மருத்துவ கலந்தாய்வில் சுபஸ்ரீக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும், ஸ்ரீபரனுக்கு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அவர்களையும் அவர்களை நன்றாக படிக்க வைத்த பெற்றோரையும் அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றார்கள்.