அரசு பேருந்துகள் மோதி கொண்ட விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று கரூர் நோக்கி நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. இதே போல் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எல்லரசு பாலம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக இரண்டு அரசு பேருந்துகளும் முன்பக்க பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.