விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கான திட்ட மதிப்பீடு 11.33 கோடி ஆகும். இதே நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக மகப்பேறு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதற்கான திட்ட மதிப்பீடு 6.89 கோடி ஆகும். இந்த 2 நிகழ்ச்சிகளிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது, புதிதாக 20 கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இந்த கட்டிடங்கள் 1 1/2 வருடத்திற்குள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். அதன் பிறகு கோவிலாறு அணை, சாஸ்தா அணை, பிளவக்கல் பெரியார் அணை போன்றவைகள் நிரம்பி வரும் நிலையில் கலெக்டருடன் ஆலோசனை நடத்தி அணைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த 29-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது என்று கூறினார்.