காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி வண்ணான்விளை பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராஜேஸ்வரியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் ராஜேஸ்வரியை தேடி வந்தனர்.
இந்நிலையில் குழிக்காட்டுவிளை பகுதியில் வசிக்கும் வெனிஸ்(22) என்பவருடன் ராஜேஸ்வரி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இருவரும் 6 மாதங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.