தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்தது.
8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும்.
இந்த தொடரில் இந்தியா தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. முதல்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி 4 பள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு போட்டி மழையால் ரத்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான ஒரு வெற்றி என 3 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு பெர்த் மைதானத்தில் மோதியது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அக்சர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார்.. அதேபோல தென்னாப்பிரிக்க அணியில் தப்ரைஸ் ஷம்சிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், கே.எல் ராகுலும் களமிறங்கினர். பார்னெல் வீசிய முதல் ஓவரில் கேஎல் ராகுல் 6 பந்துகளையும் சந்தித்து ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. அதன்பின் ரபாடா வீசிய இரண்டாவது ரோகித் சர்மா சிக்சர் உடன் தனது ஆட்டத்தை தொடங்கினார். அதன்பின் ராகுல் பார்னெல் வீசிய 3ஆவது ஓவரில் சிக்சருடன் தனது ஆட்டத்தை தொடங்கினார்.. இருப்பினும் தொடக்கத்திலேயே தென்னாப்பிரிக்க பவுலர்கள் சிறப்பாக வீசினர்.
அதன்பின் லுங்கி இங்கிடி வீசிய 5ஆவது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அதே ஓவரில் கேஎல் ராகுல் 9 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். பின்வந்த விராட் கோலி 2 பவுண்டரி அடித்து நன்றாக தொடங்கிய நிலையில் 12 ரன்கள் எடுத்தபோது அதே லுங்கி இங்கிடி வீசிய 7ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். லுங்கி இங்கிடி தொடக்கத்திலேயே 3 முக்கிய வீரர்களை தூக்கினார். அதனைத் தொடர்ந்து அன்ரிச் நார்ட்ஜே ஓவரில் தீபக் ஹூடா டக் அவுட் ஆனார். பின்வந்த பாண்டியாவும் 2 ரன்னில் இருந்தபோது லுங்கி இங்கிடி ஓவரில் பந்தை லெக் திசையில் அடித்து ரபடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருப்பினும் மறுமுனையில் சூரியகுமார் யாதவ் மட்டும் நின்று கொண்டிருந்தார்.
அப்போது இந்திய அணி 8.3 ஓவரில் 49/5 என இக்கட்டான நிலைமையில் இருந்தது. இதையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஜோடி சேர்ந்தனர். தினேஷ் கார்த்திக் பொறுமையாக ஆட, சூரியகுமார் தேவையான நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து சிறப்பாக ஆடி 15ஆவது ஓவரில் அரை சதம் அடித்தார். அதன் பின் 16வது ஓவரில் 15 பந்துகளை எதிர் கொண்ட நிலையில் 6 ரன்கள் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக் அடிக்க போய் அவுட் ஆனார். பின் பார்னெல் வீசிய 19ஆவது ஓவரில் அஷ்வின் 7 ரன்னில் அவுட் ஆக அதே ஓவரின் கடைசி பந்தில், தூக்கி அடிக்க முயன்ற சூர்யகுமார் 40 பந்துகளில் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து 19ஆவது ஓவரில் 3 ரன் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்தது. பின் அன்ரிச் நார்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. ஷமி லாஸ்ட் ஓவரில் ரன் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளும், பார்னெல் 3 விக்கெட்டுகளும் நார்ட்ஜே ஒரு விக்கெட்டும் எடுத்தனர். தற்போது தென்னாப்பிரிக்க அணி களமிறங்கி ஆடி வருகிறது.