வடகிழக்கு பருவமழை பற்றிய முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையாளருமான தாரேஸ் அகமது தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் பேசும் போது, வடகிழக்கு பருவமழை காலம் என்ற காரணத்தினால் மழை பெய்யும் போது அனைத்து சாலைகளிலும் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேம்பாலங்கள் சாலைகள் போன்றவை பழுதடைந்து இருப்பதால் நெடுஞ்சாலை துறை மூலமாக அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும் பொது மக்களுக்கு குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும். கரையோரம் உள்ள கிராமங்களில் உரிய முறையில் அறிவிப்பு செய்ய வேண்டும். மணல் மூட்டைகள் போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும் எனவும் பழுதடைந்த மின்கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் திறந்த வெளி வடிகால்களை சுத்தம் செய்து மூடிடவும், பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்வதற்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படாத விதமாக பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.