தமிழகத்தில் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல காலமாக பயணிகளிடம் நிலவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்து சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊரப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் பணிமனை கழகத்திற்கு சொந்தமானதாகும். இப்பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பேருந்தின் பின்பக்க சக்கரம் தனியாக கழண்டு சாலையில் உருண்டோடியது. இதனால் ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, பயணிகளும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர்த்தபினர். மேலும் திடீரென டயர் கழண்டு உருண்டோடியது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.