எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், விராட் கோலிக்கும் இடையிலான பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்கா பேட்டர் எய்டன் மார்க்ரம் கூறியுள்ளார்.
8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி இன்று அக்.,30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது.
இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டியிலும் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் சிக்கி தவித்த போது விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்து இந்திய அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதேபோல நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி 62 ரன்கள் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
இரண்டு போட்டியிலுமே கிங் கோலி சிறப்பாக ஆடி நல்ல பார்மில் இருக்கிறார். உலகக் கோப்பையில் எதிரணி பயப்படும் அளவிற்கு அவரது ஆட்டம் இருக்கிறது. கடந்த சில காலங்களாக பார்மில்லாமல் தவித்து வந்த கோலி ஆசிய கோப்பை தொடரிலிருந்து தனது ஃபார்மை அப்படியே தொடர்கிறார். எனவே இன்றைய தென்னாப்பிரிக்க போட்டியிலும் அவர் அதிரடியை தொடர்வார் என்று நம்பலாம்.
இந்நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா போட்டிக்கு முன்னதாக விராட் கோலி குறித்து எய்டன் மார்க்ரமிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், இது பரபரப்பாக இருக்கும். எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் அவருக்கு பந்து வீசுவதை விரும்புகிறார்கள். அவர் ஃபார்ம் கண்டுள்ளார், ஆனால் எங்களது பவுலர்களும் தற்போது சிறப்பாக செயல்படுகின்றனர். பெர்த் மற்ற மைதானங்களை விட பவுன்சியர். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.