செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் சிறுமலை செட் பகுதியில் கையில் பையுடன் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். மாலை 6.30 மணிக்கு திடீரென அந்த வாலிபர் செல்போன் அந்த பையில் இருந்து அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள், பட்டாசுகள் மற்றும் கோரிக்கை மனுவை கையில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் இருந்து செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உச்சிக்கு சென்றார். இதனை அடுத்து கட்சி கொடிகளை அங்கு கட்டி விட்டு வாலிபர் அங்கிருந்தே பட்டாசுகளை வெடிக்க தொடங்கினார்.
அப்போது பட்டாசு வெடிக்கும் சத்தத்துடன் தீப்பொறி கீழே விழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை கீழே இறங்குமாறு கூறிய போது அவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் செல்போன் எண்ணை பெற்று அவருடன் பேசியுள்ளார்.
அப்போது அவர் தென்மலையில் வசிக்கும் மூக்கையா(32) என்பது தெரியவந்தது. இந்நிலையில் கடன் பிரச்சனை மற்றும் நில பிரச்சனையால் அவதிப்பட்ட மூக்கையா தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்த பிறகு வாலிபர் கீழே இறங்கி வந்தார் பின்னர். இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து மூக்கையாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.