தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ஆம் தேதி தொடங்க வேண்டியது.. ஆனால் வங்க கடலில் உருவான ‘சிட்ரங்’ புயலின் காரணமாக வடக்கு திசையை நோக்கி காற்றின் நகர்வு இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை சற்றே தாமதமாக 29ஆம் தேதி இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தாமதமாக தொடங்கினாலும் இந்த தாமதத்திற்கும் மழைப்பொழிவு குறையுமா என்றால் இரண்டிற்கும் சம்பந்தமில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கொடுக்கப்பட்ட முன்னறிவிப்பின் படி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை ஒட்டிய அளவில் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 88 சதவீதத்திலிருந்து 112 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அதிகப்படியான புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே சொல்லி இருந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான மழை அளவு அக்டோபர் முடிவிலிருந்து நவம்பர், டிசம்பர் இரண்டு மாதத்திற்கும் சேர்த்து 45 சென்டிமீட்டர் தான் இயல்பான மழையளவு, கடந்த 2021ஆம் ஆண்டு 71 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவானது. கிட்டத்தட்ட 59 சதவீதம் அதிகப்படியான மழை பதிவானது. சென்னையில் இயல்பை விட 74 சதவீதம் அதிகப்படியான மழை பதிவானது..
2020 ஆம் ஆண்டும் இயல்பை விட 6 சதவிகிதம் அதிகமாக பெய்தது. 2019 இயல்பை விட 2 சதவீதம் அதிகமான மழை பெய்தது. இந்த ஆண்டும் இயல்பை ஒட்டி அல்லது இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ளது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது..