பாட்டி, பேரனை பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற நிலையில் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்சங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் மனைவி மேரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் மேரி தனது குழந்தை மற்றும் மனநலம் பாதித்த தனது தாயாருடன் ஈரோட்டிற்கு துணி எடுக்க சென்றுள்ளார்.
அவர்கள் திருச்செங்கோட்டில் இருந்து பேருந்தில் புறப்பட்டார்கள். கடைசி சீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது பேரனுடன் அமர்ந்திருந்தார். திடீரென மனநல பாதிக்கப்பட்ட பெண் தனது பேரனுடன் காணாமல் போனார். இதனால் மேரி அதிர்ச்சி அடைந்து தனது கணவருடன் பல இடங்களில் தேடி இருக்கின்றார்.
ஆனால் கிடைக்கவில்லை. இதனிடையே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை பேருந்து நிலையத்தில் உள்ள அரசு டவுன் பேருந்து அடியில் குழந்தையை வைத்துவிட்டு சென்றதை மோகன் என்பவர் பார்த்து திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் பேருந்து நிலையத்திற்கு சென்று போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார்கள். இதை அடுத்து பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.