சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி முயல் கரடு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதுடைய முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த ஜூலை மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணிற்கு பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்தது. இதனை நம்பி அதில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என கூறியதை நம்பி முத்துக்குமார் முதலில் ரூ.100, ரூ.200, ரூ.300 என அனுப்பியதில் அவருக்கு 456 ரூபாய் கமிஷன் தொகையாக கிடைத்தது.
இதனை தொடர்ந்து 68 முறை 10,000 ரூபாய், 20,000 ரூபாய் வீதம் 15 லட்ச ரூபாய் பணத்தை முத்துக்குமார் முதலீடு செய்த பிறகு எந்த கமிஷன் தொகையும் வரவில்லை. சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் தான் மாற்றப்பட்டதை உணர்ந்த முத்துக்குமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.