தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுமே செய்து கொடுக்கப்பட வேண்டும். அதாவது பள்ளி கட்டடங்களில் ஏற்படும் பழுது, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கற்பித்தலுக்கு தேவையான பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட வசதிகளை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் உடைய எண்ணிக்கைக்கு ஏற்றார் போல நிதியும் வழங்கப்படுகிறது.
இதனை அந்த வருடத்திற்குள் மட்டுமே செலவழிக்க வேண்டும். ஆனால் இந்த நிதியானது தாமதமாக வழங்கப்படுவதால் முறையாக பயன்படுத்த முடியவில்லை என்று பள்ளி ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியானது ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கட்டாயமாக தேவைப்படுகிறது. இதனை நிதியாண்டின் தொடக்கத்திலேயே அனுப்புவதன் மூலமாக மாணவர்களுக்கு தேவைப்படும் வசதிகளை முறையாக செய்து கொடுக்க முடியும். அதோடு மழைக்காலங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்கள்.