செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள எருமைப்பட்டி அருகே இருக்கும் முண்டான்செட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கும் அவரின் அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. வழக்கின் முடிவு தாமதமாகி வருவதால் அண்ணாதுரை மிகுந்த மன வேதனை அடைந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில் அவர் நேற்று சேந்தமங்கலம் நீதிமன்றம் அருகே இருக்கும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள். பின் அவரை பத்திரமாக மீட்டார்கள். இதன்பின் அண்ணாதுரையிடம் போலீசார் விசாரணை நடத்திய போது வழக்கு நடைபெறும் பட்சத்தில் தமக்கு இலவசமாக வாதாட வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கான நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறி எச்சரித்து அவரை அனுப்பி வைத்தார்கள்.