உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்த நிலையில், சிலபிரச்சனைகளின் காரணமாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை என்று அறிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அதிரடியாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லோகோவான பறவையை சுட்டிக்காட்டி பறவை விடுவிக்கப்பட்டுள்ளது என மஸ்க் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
எலான் மஸ்க தலைமையகத்துக்கு சென்று பதவி ஏற்ற உடனே பல அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்தார். அதன்படி தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதித்துறை அதிகாரி நெட் சேகல், சட்டம் மற்றும் நிதித்துறை தலைவர் விஜயா காட்டே உள்ளிட்டோர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டுவிட்டர் நிறுவனத்தை தான் வாங்கினால் 75% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்தார்.அதோடு வலை தளத்தில் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பேன் என்றும் கூறியிருந்தார். இதனால் நிர்வாகிகளை தொடர்ந்து ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டுவிட்டர் நிறுவனத்தில் எப்போது யாரை தூக்க போகிறார் என்ற பரபரப்பு ஊழியர்களிடம் தற்போது நிலவுகிறது.