கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 மாத குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் எஸ்.எஸ் தேவி நகரில் பழைய இரும்பு வியாபாரியான வீரமணி(31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்த 4 மாதமேயான சாதனாதேவி, 2 வயதுடைய கிருஷ்கா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்காவை திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு வீரமணி காரில் அழைத்து சென்றுள்ளார். அவருடன் பிரியங்கா, சாதனாதேவி, வீரமணியின் பெரியம்மா ராஜேஸ்வரி(52) ஆகியோர் சென்றுள்ளனர். சிகிச்சை முடிந்து அவர்கள் காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வேடந்தூர்- திண்டுக்கல் சாலையில் நாகம்பட்டி அருகே சென்ற போது சாலையின் குறுக்கே பன்றி வந்ததால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக வீரமணி வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராஜேஸ்வரி, சாதனாதேவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீரமணி, பிரியங்கா, கிருஷ்கா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஸ்வரி மற்றும் சாதனாதேவி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.