Categories
உலக செய்திகள்

“பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை”…. தகவல் தெரிவித்த டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர்….!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க். இதற்கு முன்னதாக, டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க முன்வந்தார் உலக  பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்துள்ளார். பின்னர் சில வாரங்களிலேயே அதிலிருந்து பின் வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. டுவிட்டர் நிறுவனம் ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு அக்டோபர் 28-க்குள்(இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்துள்ளது. எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலை நேரத்திற்க்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி இன்றைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் தனது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்ததாக நேற்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில், கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவதற்கு ஒருநாள் முன்பே, ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரானார். டுவிட்டர் முதலீட்டாளர்களில் ஒருவரான ரோஸ் கெர்பர், எலான் மஸ்க்கின் ஒப்பந்தம் முடிந்ததை உறுதிப்படுத்தினார்.

மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளார். பல ஆய்வாளர்கள் டுவிட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் இப்போது செலுத்தும் விலை மிக அதிகம் என்று தெரிவித்தனர். இந்நிலையில், ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, பராக் மற்றும் நெட் செகல் ஆகியோர் டுவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் இனி அங்கே திரும்பமாட்டார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானது குறித்து எலான் மஸ்க் கூறியதாவது, “இந்நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை. மனிதகுலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமான டுவிட்டரை வாங்கினேன்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரான பின், வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல்களுக்காக தடை செய்யப்பட்ட பலர், (அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்பட பலர்) மீண்டும் டுவிட்டருக்கு வருவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |