கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் ஜோடியினருக்கு அமைச்சர் மா.சுபிரமணியன் தாலி எடுத்துக் கொடுக்க இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெவ்வேறு காரணங்களால் சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரன் என்பவரும், வேலூரை சேர்ந்து 36 வயதான தீபா என்பவரும் கீழ்பாக்க மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெற தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவர்களுக்கு அளித்த தொடர் சிகிச்சையின் பலனாக மன அழுத்தம் நீங்கி மனநோயிலிருந்து விடுபட்ட இரண்டு பேரும் காப்பகத்தில் உள்ள கேர் சென்டரில் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதனை அடுத்து எம்பில் வரை படித்திருக்கும் மகேந்திரன் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கான பயிற்சி மையத்தில் பராமரிப்பதாக பணியாற்றி வருகின்றார். ஆசிரியர் படிப்பு முடித்த தீபாவும் அதே காப்பகம் சார்பில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தீபாவிற்கும் மகேந்திரனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது ஆரம்பத்தில் இவரது காதலுக்கு மனநலக் காப்பகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. இருவரும் முழுமையாக சிகிச்சையில் இருந்து குணமடைந்த பின் காதலை ஏற்று இன்று (28.10.2022) இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு இருவிட்டாரும் சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. இதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் தாலி எடுத்துக் கொடுக்க கெட்டி மேளம் கொட்ட மகேந்திரன் தீபாவிற்கு தாலி கட்டியுள்ளார்.