நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் ஆதிதிராவிடர்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழுந்தடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறைக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மூன்று மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும்.ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் அனுபவம் வாய்ந்த முதுநிலை ஆசிரியர்கள் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது என்பதை உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு சார்பாக விரிவான பிரமாண பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.