ஓமலூர் அருகே வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளியை கொள்ளை அடித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், சாகர் மற்றும் சிவதாபுரம் பனங்காடு பகுதியை சேர்ந்த விக்ராந்த் உள்ளிட்ட மூன்று பேரும் வெள்ளியை மொத்தமாக வாங்கி செவ்வாய்பேட்டை பகுதியில் சில்லறையாக விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்கள். இந்நிலையில் சென்ற 13ஆம் தேதி மூன்று பேரும் சேலத்தில் இருந்து கார் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்று அங்கிருந்து 50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ வெள்ளியை வாங்கிக்கொண்டு சேலம் நோக்கி வந்துள்ளார்கள்.
சென்ற 16ஆம் தேதி இரவு ஓமலூர் அருகே இருக்கும் செட்டிபட்டி பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது இரண்டு கார்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இவர்களின் காரை வழிமறித்து விக்ராந்த் மற்றும் சாகர் உள்ளிட்ட இருவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. காரில் சந்தோஷ் தூங்கிக் கொண்டிருக்க அவரை சங்ககிரி சுங்கவாடி அருகே கீழே தள்ளிவிட்டு 100 கிலோ வெள்ளியை எடுத்துக் கொண்டு தப்பித்து விட்டார்கள்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையடித்த கும்பல் கேரளாவில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் பாலக்காடுக்கு சென்ற போலீசார் சுரேஷ், நாசர்வுதீன், மோசின் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த எட்டு கிலோ வெள்ளி மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்தார்கள். இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.