கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019ம் வருடத்தில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
அதன்பின் ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் ஆகிய பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடிமருந்துகளை கைப்பற்றினர். இந்த வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறைச்சாலையில் அடைத்தனர்.
கோவை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தில் தொடபுள்ளவர்கள் பற்றி மாநகர காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் உத்தரவின் படி போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் கேட்பாரற்றும் உரிய ஆவணங்கள் இன்றி சாலையோரங்களில் நிற்கும் கார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று போக்குவரத்து காவல்துறையினர் உக்கடம் வின்செண்ட் சாலை ஓரத்தில் கேட்பாரற்றும் உரிய ஆவணங்கள் இன்றி நிறுத்தப்பட்டு இருந்த 7 கார்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து பல பகுதிகளிலும் காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.