பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா வருகிறது. இந்த ஜெயந்தி விழாவின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அனுவிக்கப்படும். இந்த கவசத்தை அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் வங்கியில் இருந்து எடுத்து முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அணிவிப்பார். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் தங்க கவசத்தை அணிவிப்பது தொடர்பாக கடுமையான மோதல் நடைபெற்றது.
இது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சட்ட ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு தங்க கவசத்தை ராமநாதபுரம் வருவாய் துறை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பிறகு வருவாய்த்துறை அதிகாரி தங்க கவசத்தை வங்கியில் இருந்து பத்திரமாக எடுத்துச் சென்று தேவர் சிலைக்கு அணிவித்துவிட்டு மீண்டும் பத்திரமாக வங்கியில் சென்று வைக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். மேலும் காவல்துறையினர் தங்க கவசத்திற்கு உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.