திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தகோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வகுமார், சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தீபாவளி பண்டிகை தினத்தில் இரவு நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது இதனால் மன உளைச்சலில் இருந்த அங்கம்மாள் தனது மகன்களை மறுநாள் காலை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கணவரிடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து மகன்களுடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்ற அங்கம்மாள் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுப்பகுதிக்கு சென்று மகன்களின் கையை பிடித்துக் கொண்டு ஆழமான பகுதிக்கு சென்று தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மகன்கள் தாயின் பிடியில் இருந்து மீண்டு அவரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் ஆழமான பகுதிக்கு சென்றதால் அங்கம்மாள் தண்ணீரில் மூழ்கினார்.
இதனை அடுத்து கரைக்கு தப்பி வந்த மகன்கள் நடந்தவற்றை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறி அழுதனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக அங்கம்மாளை தேடும் பணி நடைபெற்றது. ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.