தமிழகம் முழுவதும் கடந்த 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றனர். அதோடு தீபாவளி பண்டிகையை உறவினர்கள் வீட்டில் கொண்டாடுவதற்கும் கிளம்பி சென்றனர். இதனால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதன் பிறகு பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதோடு, தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கியது.
தீபாவளி பண்டிகையின் போது தமிழகத்தில் பொது விடுமுறை விடப்பட்டிருந்ததால் மின் நுகர்வு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 20.67 கோடி யூனிட்களாக மின் நுகர்வு குறைந்துள்ளது. இது இந்த வருடத்தின் மிகவும் குறைந்த மின் நுகர்வு என்று சொல்லப்படுகிறது. தினந்தோறும் சராசரி மின் நுகர்வானது 30 கோடி யூனிட் ஆக இருந்தது.
ஆனால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் சொந்த ஊருக்கு மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு சென்றதால் 20-ம் தேதி 29.98 கோடி யூனிட் ஆக இருந்த மின் நுகர்வானது, 21-ம் தேதி 29.93 கோடி யூனிட் ஆக குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து 22-ம் தேதி 28.71 கோடியாகவும், 23-ம் தேதி 24.82 யூனிட்டுகளாகவும் குறைந்துள்ளது. மேலும் இதுதான் இந்த வருடத்தின் மிக குறைந்த அளவு மின் நுகர்வு அளவு ஆகும்.