முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போட்டிசெட்டியபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான வள்ளிமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய நிவேதா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த தனது மகளை வள்ளிமலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முடிவு எடுத்தனர். அதன்படி டீன் கண்காணிப்பாளரின் ஆலோசனையின்படி சென்னை காது மூக்கு தொண்டை ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமையில், மயக்கவியல் டாக்டர்கள் வசந்த், கங்கா, அறுவை சிகிச்சை நிபுணர்கள் யோவானந்த், செந்தில்குமார் ஆகியோர் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் செந்தில்குமார் கூறியதாவது, பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்தால் 3 முதல் 6 வயதுக்குள் அறுவை சிகிச்சை செய்தால் காது கேட்கும் சக்தியை திரும்ப கொண்டு வந்து விடலாம். திண்டுக்கல் மாவட்டத்திலேயே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் இந்த அறுவை சிகிச்சை முதன்முதலாக செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்ததாக கூறியுள்ளார்.