Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அசத்தல் பவுலிங்… அதிரடி பேட்டிங்….. 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை..!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை அணி..

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய நேரப்படி காலை 9:30 மணிமுதல் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டிர்லிங் மற்றும் பால்பிர்னி இருவரும் களமிறங்கினர். இதில் பால்பிர்னி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்..

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஸ்டிர்லிங் 25 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து லோர்கன் டக்கர் 10, கேம்பர் 2, ஜார்ஜ் டோக்ரெல் 14, டெலானி 9, மார்க் அடேர் 0 என சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்த போதிலும் ஹேரி டெக்டர் பொறுமையாக ஆடி 45 (42) ரன்கள் எடுத்தார். இலங்கை அணியினர் சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் அயர்லாந்து அணியினர் விக்கெட்டுகளை  விட்டதால் பெரிய ரன்கள் அடிக்க முடிய வில்லை.

இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிமி சிங் 7 ரன்களுடனும், பேரி மெக்கார்த்தி 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.. இலங்கை அணியில் அதிகபட்சமாக மகீஷ் தீக்ஷனா மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்..

இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசால் மெண்டிஸ் மாற்றும் தனஞ்செய டி சில்வா இருவரும் களமிறங்கி இலக்கை துரத்தினர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். குறைந்த ஸ்கோர் என்பதால் பவர் பிளேக்குள் 1 -2 விக்கெட்டுகளை விரைவாக எடுக்க வேண்டும் என்று அயர்லாந்து பந்துவீசியது.. ஆனால் அயர்லாந்து பந்துவீச்சை இருவரும் சிறப்பாக எதிர்கொண்டதால்  பவர்பிளேவுக்குள் 50 ரன்களை கடந்தது இலங்கை அணி.

அதன்பின் 9ஆவது ஓவரில் தான் தனஞ்செய டி சில்வா 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் அசலங்கவுடன் குசால் மெண்டிஸ் சேர்ந்து இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். இலங்கை அணி 15 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. குசால் மெண்டிஸ் 43 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 68 ரன்களுடனும், அசலங்கா 22 பந்துகளில் 31 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Categories

Tech |