சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதனால் சூப்பர் 12 சுற்றிலுள்ள குரூப் 1 பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை ஆகிய 6 அணிகள் இடம் பிடித்துள்ளது. குரூப் 2 பிரிவில் வங்கதேசம், இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய 6 அணிகள் இடம்பெற்றுள்ளன.. ஒட்டுமொத்தமாக 12 அணிகள் சூப்பர் 12ல் இருக்கின்றன.
இந்நிலையில் சூப்பர் 12 சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது.. அதில் முதலாவதாக குரூப் 1 பிரிவிலுள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி இன்று மதியம் மோதியது. இதில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.. இதனைத்தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு பெர்த்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்..
அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 32 ரன்களும் உஸ்மான் கானி 30 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாம் கரன் 5 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 18 மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் டேவிட் மலன் 18, பென் ஸ்டோக்ஸ் 2, ஹாரி புரூக் 7 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் இறங்கிய லிவிங்ஸ்டண் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் வெற்றிக்கு வித்திட்டார். மொயின் அலியும் ஆட்டமிழக்காமல் 8 ரன்னுடன் களத்தில் இருந்தார்.. இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 5 விக்கெட் இழந்து 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3.4 ஓவர் வீசி 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்த சாம் கரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.