Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர்…. உயிருடன் வந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டை பாறைபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான பழனிச்சாமி(72) என்பவர் வசித்து வருகிறார். வேலை விஷயமாக பழனிச்சாமி அடிக்கடி வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்த முதியவர் பழனிசாமி தானா? என அடையாளம் காட்டுவதற்கு உறவினர்களை வரவழைத்தனர்.

அப்போது முகம் சிதைந்து இருந்ததால் சரிவர பார்க்காமல் உறவினர்கள் இறந்தவர் பழனிச்சாமி என்று கூறியதால் போலீசார் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலை ஒப்படைத்தனர். பின்னர் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. நேற்று இறந்ததாக நினைத்த பழனிச்சாமி உயிருடன் வீட்டிற்கு வந்ததை பார்த்து உறவினர்கள் சந்தோஷத்தில் அவரை கட்டித் தழுவினர். அப்போது வேலை விஷயமாக பக்கத்து ஊருக்கு சென்றதால் தகவல் தெரிவிக்க முடியவில்லை என பழனிசாமி கூறியுள்ளார். பழனிச்சாமி உயிருடன் வந்ததால் இறுதி சடங்கு யாருக்கு செய்யப்பட்டது? இறந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |