மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வன்னியூர் தெற்றிக்குழி பகுதியில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மனைவி உள்ளார். மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கிறிஸ்டோபரை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு தனது மனைவி குடிப்பதற்கு பணம் இல்லை என கூறியதால் கிறிஸ்டோபர் வினிதா மீது மண்ணெண்ணையை ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றார்.
இதில் படுகாயம் அடைந்த வினிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கிறிஸ்டோபரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கிறிஸ்டோபருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், 7 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.