மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை ஒருவர் காரால் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் இருந்து தனியார் பேருந்து சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஓயாமரி அருகே சென்றபோது ஒரு காரை முந்தி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் மீது உரசி விட்டு தனியார் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் விரட்டி சென்று மற்றொரு இடத்தில் வைத்து பேருந்தை நிறுத்த முயன்றார்.
அப்போதும் பேருந்து கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் ஓடத்துறை ரயில்வே மேம்பாலத்தில் வைத்து கார் ஓட்டுநர் பேருந்தை முந்தி சென்று தனது காரை நிறுத்தி வழிமறித்தார். சுதாரித்துக் கொண்டு பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பின்னர் கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.