2023 ஆசியக் கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர்கள், வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் காட்டமாக பதிலளித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் 91 வது பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரான ஜெய் ஷா பேசியதாவது, “2023 ஆசிய கோப்பை நடுநிலையான இடத்தில் நடைபெறும். இதை ஏசிசி தலைவர் என்ற முறையில் சொல்கிறேன். நாங்கள் [இந்தியா] அங்கு [பாகிஸ்தானுக்கு] செல்ல முடியாது, அவர்கள் இங்கு வர முடியாது. கடந்த காலத்திலும், ஆசியக் கோப்பை நடுநிலையான இடத்தில் விளையாடப்பட்டது, 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானிலிருந்து நடுநிலையான இடத்திற்கு மாற்றப்பட்டால் இந்தியா பங்கேற்க முடியும். ”என்று ஷா கூறினார்.
இதையடுத்து ஆசியக் கோப்பையை பாகிஸ்தானில் இருந்து மாற்றுவது ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட முடிவு என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடுமையான வார்த்தைகளைக் கொண்ட கடிதம் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்தியாவில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையை நங்கள் புறக்கணிக்க தயங்கமாட்டோம் என்று எச்சரித்திருந்தது.
இதுபற்றி பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பதிலடியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான வக்கார் யூனிஸ் பிசிசிஐயை சாடினார் மற்றும் இந்திய வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை “சேதப்படுத்துகிறது” என்று குற்றம் சாட்டினார்.
வக்கார் யூனிஸ் கூறியதாவது, “அவர்கள் பாகிஸ்தானை சேதப்படுத்த விரும்புகிறார்கள். பாகிஸ்தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், பிசிபி ஒரு நல்ல அறிக்கையை வழங்கியதாக நான் நினைக்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும், மேலும் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விட அதுவே முக்கியம் என்பதால் நமது கண்ணியத்தையும் மரியாதையையும் நாம் கவனிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம், ”என்று கூறினார்.
இதற்கிடையில், அவரது முன்னாள் பந்துவீச்சு பங்காளியும் ஜாம்பவானுமான வாசிம் அக்ரம், பாகிஸ்தான் எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை இந்தியாவால் கட்டளையிட முடியாது என்றும், ஜெய் ஷா அனைத்து உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவர் கூறியதாவது: பாகிஸ்தான் எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை இந்தியாவால் தீர்மானிக்க முடியாது. அரசியல் முன்னணியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் கூற முடியாது. மக்கள் ஒருவருக்கொருவர் பேச வேண்டும். ஷா ஏதாவது சொல்ல வேண்டும் என்றால்… பிசிபி தலைவர் ரமீஸ் ராஜாவை அழைத்திருக்க வேண்டும். மற்ற வாரியங்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு கூட்டத்தை ஜெய் ஷா கூட்டியிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ACC தானே பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பைக்கான உரிமையை வழங்கியது என்று சாடினார்..