சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த அறிக்கையில் அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் சமீன்சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்து இருந்தாலும், அது நடக்கவில்லை. இதையடுத்து அவருக்கு திறந்த இதய அறுவைசிகிச்சை சாதாரண அறையில் வைத்து செய்யப்பட்டது.
அப்போது ரத்த வெள்ளத்திலிருந்த ஜெயலலிதாவை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அப்போதைய தலைமை செயலாளர் சாட்சியம் கூறினார். இதனிடையில் ஜெயலலிதா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் மருத்துவர் சிவக்குமாரிடமும், சசிகலாவிடமும் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஜெயலலிதா மிகவும் இருமியபடி, “நான் பேசுவது கேட்கிறதா. தன்னால் எதுவும் முடியவில்லை. மூச்சுவிடும்போது உய் உய் என கேட்கிறது. நான் கூப்பிட்ட போது எடுக்க முடியலனு சொன்னீங்க.
எல்லாம் ஒன்னுகிடக்க ஒன்னு கூறுறீங்க. இதனால் நீங்களும் சரியில்லை. எடுக்க முடியலனா விடுங்க” என்று கூறுவதுபோல் இடம்பெற்று இருக்கிறது. பின் சிவக்குமார், தற்போது எதுவும் கேட்கவில்லை, அப்ளிகேஷன் டவுன்லோட் செய்திருக்கிறேன் என்று மருத்துவரீதியாக கூறுகிறார். அதேபோன்று மற்றொரு குரல், ஜெயலலிதாவிடம் கவலைப்படாதீங்க, படுத்த பின் மாஸ்க் போட்டுக்கொள்ளலாம் என்று கூறியது இடம்பெற்று இருக்கிறது. அக்குரல் சசிகலாவின் குரல் என்று கருதப்படுகிறது. இப்போது இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதே நேரம் இந்த ஆடியோ பற்றிய உண்மைத்தன்மை எதுவும் உறுதிசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.